Home » » புரூஸ் லீயின் பிறந்தநாள் இன்று...!

புரூஸ் லீயின் பிறந்தநாள் இன்று...!

தற்காப்பு கலைக்கு உலக அங்கீகாரம் வாங்கிக் கொடுத்தவர் புரூஸ் லீ. இளைஞர்களின் ஆதர்ஷ நாயகன். உடம்பை எங்ஙனம் பேணுவது என உலகுக்கு கற்றுக் கொடுத்த ஆசான். தனது 33-வது வயதிலேயே புரூஸ் லீ மரணத்தை தழுவியது பெரும் இழப்பு.




புரூஸ் லீ சண்டையிடும் வேகம் பிரமிக்கத்தக்கது. இவரது கைகளும் கால்களும் எதிரியை தாக்கும் வேகத்துக்கு அன்றைய திரையுலகத் தொழில்நுட்பத்தால் ஈடு கொடுக்க முடியவில்லை. பொதுவாக ஒரு வினாடிக்கு 24 கட்டங்கள் என்பதே கணக்கு. புரூஸ் லீயின் வேகத்துக்கு ஈடுகொடுக்க ஒரு வினாடிக்கு 34 கட்டங்களாக மாற்றியமைத்தனர்.

1940 27, நவம்பர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவின் சைனா டவுன் பகுதியில் உள்ள ஜாக்சன் ஸ்ட்ரீட் மருத்துவமனையில் புரூஸ் லீ பிறந்தார். இவரது தந்தை லீ ஹோய்-சுவென், ஒரு நடிகர். தாய் கிரேஸ் ஒரு கத்தோலிகர்.

புரூஸ் லீக்கு பெற்றோர்கள் 'லீ ஜுன்பேன்' என பெயர் வைத்தனர். சீன மொழியில் இதற்கு உலக பாதுகாவலர் என்று பொருள். இந்த பெயர் அமெரிக்க நர்ஸின் வாயில் நுழையவில்லை 'ஜுன் பேன்' சிரமமாக இருந்ததால் அந்த நர்ஸ் புரூஸ் என செல்லமாக கூப்பிட, அதுவே பிற்காலத்தில் அவரது பெயராக நிலைபெற்றது.

புரூஸ் லீக்கு மூன்று மாதம் ஆனபோது அவரது குடும்பம் ஹாங்காங் வந்தது. 12 வயதுவரை லா செல் கல்லூரியில் மேல்நிலைக் கல்வி பயின்றார் புரூஸ் லீ. பிறகு புனித பிரான்சிஸ் சேவியர் கல்லூரியில் அவரது படிப்பு தொடர்ந்தது.

1959-ம் ஆண்டு தனது பதினெட்டாம் வயதில் ஹாங்காங் கேங்ஸ்டர் ஒருவரின் மகனை தாக்கினார் புரூஸ் லீ. இந்த சம்பவத்தால் பயந்து போன அவரது தந்தை, புரூஸ் லீயை சான் பிரான்சிஸ்கோ அனுப்பி வைத்தார்.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் புகழ் தற்காப்பு கலை வட்டாரத்தில் பரவ ஆரம்பித்தது. சான் பிரான்ஸ்கோவிலும், சியாட்டிலிலும் படிப்பை தொடர்ந்தவர் பிறகு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிலாஸபி பிரிவில் சேர்ந்தார். அங்கு தான் இவர் தனது மனைவி லிண்டா எமரியைச் சந்தித்தார்.

புரூஸ் லீயின் நடிப்பு வாழ்க்கை அவரது சிறு வயதிலேயே தொடங்கியது. அவரது தந்தை ஒரு நடிகர் என்பதால் தனது 18-வயதிற்குள் இருபது படங்களில் நடித்தார். அமெரிக்காவில் இருந்தபோது 'பேட்மேன்' படத்தின் தயாரிப்பாளர் வில்லியம் டோசியர் பார்வையில் பட்டது இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

அவர் அமெரிக்காவில் இருந்தபோது ’தி கிரீன் ஹார்னட்’ , 'அயர்ன் சைடு’, 'ஹியர் கம் த பிரைடுசு’ ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். அமெரிக்காவிலிருந்து ஹாங்காங் திரும்பிய புரூஸ் லீயுடன் கோல்டன் ஹார்வெஸ்ட் கம்பெனி தயாரிப்பாளர் ரேமண்ட் செள ஒப்பந்தம் செய்து கொண்டார். இவரது தயாரிப்பில் புரூஸ் லீ நடித்து வெளிவந்த முதல்படம் பிக்பாஸ். 1971-ல் வெளிவந்த இப்படத்திற்கு முன்பே ஹாங்காங் முழுவதும் பிரபலமாகியிருந்தார் புரூஸ் லீ. பாக்சிங் சாம்பியனாகவும்,'கிரவுன் காலனி சா சா’ சாம்பினாகவும் அறியப்பட்டிருந்த நேரத்தில் இப்படம் வெளியானது.

கடத்தல் முதலாளிகளுக்கும் அப்பாவி தொழிலாளிக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டமே 'பிக் பாஸ்' படத்தின் கதை. புரூஸ் லீயின் அதிவேக சண்டைகளும், கண்களில் அவர் காட்டிய வெறியும் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெற செய்தது. ஆசியாவில் 12 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்தது.

இதையடுத்து 1972-ல் 'பிஸ்ட் ஆஃப் பியூரி' படம் வெளியானது. தனது மாஸ்டரை கொன்றவர்களை புரூஸ் லீ பழிவாங்கும் கதை. நரம்புகள் புடைக்க எதிரியை ஒரே குத்தில் அவர் வீழ்த்தி ஆக்ரோஷமாக கூச்சலிடும் காட்சி ரசிகர்களின் ரத்த ஓட்டத்தை எகிறச் செய்தது. முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடண்டுகளுடன் சண்டையிடும் காட்சி இதன் பிரதானம். 15 மில்லியன் டாலர்களை இப்படம் குவித்தது.

புரூஸ் லீ கதை எழுதி இயக்கிய 'வே டு த டிராகன்' படம் 'பிஸ்ட் ஆவ் பியூரி' வெளியான அதே ஆண்டு வெளியானது. (இப்படத்தை 'ரிடர்ன் ஆவ் த டிராகன்' எனவும் கூறுவர்). இப்படம் உலகம் முழுவதும் புரூஸ் லீயின் புகழை கொண்டு சேர்த்தது. அவருடன் சேர்ந்து குங்பூ கலையும் புகழடைந்தது.

இந்த காலகட்டத்தில் புரூஸ் லீயின் குங்பூ ஹாலிவுட் சினிமாவில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. முக்கியமாக 'வே டு த டிராகன்' படத்தின் இறுதிக்காட்சியில், தான் அமெரிக்காவில் இருந்தபோது சந்தித்த கராத்தே மாஸ்டர் சக் நாரிஸை புரூஸ் லீ பயன்படுத்தினார்.

அமெரிக்க தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து புரூஸ் லீ உருவாக்கிய படம் 'என்டர் த டிராகன்'. ஹாலிவுட்டை மட்டுமின்றி உலகையே ஆட்கொண்டது இந்தப் படம். அன்றைய அமெரிக்க டாலர் மதிப்பில் இது வசூலித்தது (அமெரிக்காவில் மட்டும்) 850, 000 டாலர்கள்! இன்றைய மதிப்பில் இது பல மில்லியன்கள் பெறும். உலகம் முழுவதும் இப்படம் 200 மில்லியன் டாலர்களை வசூலித்து புரூஸ் லீயை தற்காப்பு கலையின் முடிசூடா மன்னனாக்கியது.

ஆனால், இந்த வெற்றியை அவரால் பார்க்க முடியவில்லை; 'என்டர் த ட்ராகன்' வெளியாவதற்கு மூன்று வாரங்கள் முன்பு 1973-ம் ஆண்டு ஜுலை 20 மரணத்தை தழுவினார் புரூஸ் லீ. அன்று இரவு தலைவலி என்று தூங்கச் சென்ற புரூஸ் லீக்கு தூக்க மாத்திரை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் பின் அவர் எழவே இல்லை. 'கோமா' நிலைக்கு சென்றவர் ஹாங்காங் குயின் எலிசபெத் மருத்துவமனையில் நினைவு திரும்பாமலே காலமானார். இன்று வரை புரூஸ் லீயின் மரணம் மர்மமாகவே உள்ளது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

* 1895 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
* 1895 - பாரிசில் அல்பிரட் நோபல், நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்து தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
* 1935 - இரத்மலானை விமான நிலையத்துக்கு முதலாவது விமானம் மதராசில் இருந்து வந்திறங்கியது.
* 1940 - ருமேனியாவில் இரண்டாம் கரோல் மன்னனின் ஆதரவாளர்கள் 60 பேரை தளபதி இயன் அண்டோனெஸ்கு கைது செய்து தூக்கிலிட்டான்.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டபோர்ட்ஷயரில் ஆங்கிலேய விமானப்படைத் தளத்தின் ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட பெரும் விபத்தில் 70 பேர் கொல்லப்பட்டனர்.

* 1964 - பனிப்போர்: இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்தும்படி ஐக்கிய அமெரிக்காவையும் ரஷ்யாவையும் கேட்டுக்கொண்டார்.
* 1971 - சோவியத்தின் மார்ஸ் 2 விண்கலம் தனது துணை விண்கோள் ஒன்றை செவ்வாய்க் கோளில் இறக்கியது. இது செவ்வாயின் மோதி செயலிழந்தது. செவ்வாயில் இறங்கிய முதலாவது கலம் இதுவாகும்.
* 1975 - கின்னஸ் உலக சாதனை நூலை ஆரம்பித்து வைத்த ரொஸ் மாக்வேர்ட்டர், ஐரிஷ் குடியரசு ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* 1983 - கொலம்பியாவின் போயிங் 747 விமானம் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் அருகே வீழ்ந்து நொறுங்கியதில் 183 பேர் கொல்லப்பட்டனர்.
* 1989 - ஈழப்போரில் இறந்த போராளிகளை நினைவுகூரும் முகமாக மாவீரர் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் அறிவிக்கப்பட்டது.

* 1999 - நியூசிலாந்தின் முதலாவது பெண் பிரதமராக தொழிற்கட்சியைச் சேர்ந்த ஹெலன் கிளார்க் தேர்வு செய்யப்பட்டார்.
* 2001 - ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் ஓசிரிஸ் கோளில் ஆவியாகக்கூடிய நிலையில் ஐதரசன் மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கோள் ஒன்றில் வளி மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
* 2006 - கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் தனியான தேச இனம் என்ற அங்கீகாரத்தை கனடிய நாடாளுமன்றம் வழங்கியது.
* 2007 - ஈழப்போர்: கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் ஒலிபரப்பு நிலையம், நடுவப்பணியகம் ஆகியவற்றின் மீது இலங்கை வான்படையின் வானூர்திகள் வான்குண்டுத் தாக்குதலை நடத்தியதில் 9 பேர் கொல்லப்பட்டு 10 பேர் படுகாயமடைந்தனர்.
* 2007 - ஈழப்போர்: இலங்கை ராணுவத்தினர் கிளிநொச்சி மாவட்டம், ஐயன்கேணியில் நடத்திய கிளைமோர் தாக்குதலில் 9 பாடசாலைச் சிறுமிகள் உட்பட 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
* 2013 - இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது
Share this video :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2013. Tamilcinema - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger